ஞாயிறு, மே 26, 2013

3 படங்கள்இன்னைக்கு மூணு படம் … இந்த மூணு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னனென்னா எனக்கு இந்த மூணு படத்தோட பெயரும் மறந்து போச்சி, பார்த்தது சுமார் 5 -10 வருடங்களுக்கு முந்தி, என்னை ரொம்ப பாதிச்ச படங்கள். வேற்றுமை மூணு படமும் வேறு வேறு வகை (Genre)

முதல் படத்தோட கதை என்னவெனில், முஸ்லிம் தீவிர வாதத்தால் தனது மனைவியையும், மகளையும் இழந்து போகும் கதாநாயகன், மூஸ்லிம்களை ஒழிக்க, கிறிஸ்தவர்களைக் காக்க போஸ்னியாவுக்கு போகிறான். அங்க போய் போரில் பங்குகொண்ட பின்பே அவனுக்கு போரின் கொடுர முகம் தெரிகிறது. போரின் பெயரால் நடக்கும் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் தெரியவரும் போது அவன் அடையும் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. போர் என்பதை தொலைக்காட்சியிலும், செய்திதாள்களிலும் மட்டும்மே படித்து தெரிந்து கொள்ளும் நாமும் அதன் கோரமுகத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறோம். முதல் நாள் பார்த்து சிரித்த சிறுவன் தற்கொலை வெடிகுண்டாக வருவதும் அச்சிறுவனை கொல்லுவதற்க்கு முன் கதாநாயகன் மனதிற்க்குள் போராடுவதும், சுட்ட பின்பு அழுவதும்  நம்முள்ளும் சோகத்தை எழுப்புகிறது. ஒரேயொரு மோதிரத்தை களவுசெய்ய ஒரு முஸ்லிம் மூதாட்டியின் விரலை அறுத்து மோதிரத்தை எடுக்கும் நாயகனின் சக வீரன் (அவன் கிறிஸ்தவ கூட்டத்தின் தலைவரின் மகனும் கூட), பின்பு இரத்தக்கசிவினால் அம்மூதாட்டி இறந்து விடுவார் என்று அலட்சியமாக சொல்லிச் செல்வதும், நாயகன் ஏதும் செய்ய இயலாமல் நிற்பதும் மிகுந்த சோக சுவையை அளிக்க வல்ல காட்சிகளாகும். அதே வீட்டினில் ஒரு பச்சிளம் குழந்தை பீரோவில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதும், மோதிரத்தை எடுத்தவன் வெளியே சென்ற பின்பு அக்குழந்தை அழும்போது, நாயகன் பீரோவை திறந்து குழந்தையை பார்க்கும் போது அம்மூதாட்டி நாயகனை பார்த்து அழுவார், கண்களால் கெஞ்சுவார் (காட்டி கொடுத்து விடாதே என்று), நாயகனும் திரும்பி சென்ற சில நிமிடங்களில் விமானத்தின் மூலம் குண்டு போடப்பட்டு அம்மூதாட்டியும் குழந்தையும் கொலை செய்யப்படுவார்கள்.
பின்பு எதிரிப் படையால் கைது செய்யப்பட் யாரோ ஒருவரை  பரிமாற்றம் மூலம் அழைத்து வருவதற்காக நாயகனும் தலைவரின் மகனும் செல்கின்றனர். அங்கு தலைவரின் மகள் நிறைமாத கர்ப்பிணியாக அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறாள். முன்பு எப்போதோ எதிரி படைகளால் பிடிக்கப்பட்டு தீவிர வல்லுறவுக்கு ஆட்பட்டு இப்பொழுது நிறைமாத கற்ப்பிணியாக திருப்பி அளிக்கப்பட்டிருக்கும் அப்பெண்ணை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  திரும்பி வரும் வழியில் அப்பெண் களங்கப் பட்டு விட்டதாக கூறி அப்பெண்ணை அவள் சகோதரனே கொலை செய்ய முயல்கிறான். அம்முயற்சியை நாயகன் தடுக்கும் போது எதிர்பாராத விதமாக அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்ப்பட்டு ஒரு அழகான பெண்குழந்தையை பெற்றெடுக்கிறாள். சண்டையில் அவள் சகோதரன் மரணமடைய, இருவரும் குழந்தையும் மட்டும் வீடு நோக்கி திரும்பி செல்கின்றனர். அப்பெண்ணும் அக்குழந்தையை திரும்பி கூட பார்க்க மறுக்கிறாள், யாருக்கோ பிறந்த குழந்தையைப் போல் கண்டும் காணாமலும் இருக்கிறாள். நாயகனே அக்குழந்தைக்கு வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்கிறான்.
அந்த கிறிஸ்தவ தலைவரின் வீட்டிலும் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, திரும்பவும் பயணப்படுகின்றனர். அப்பொழுது அக்குழந்தைக்காக தந்த பால் புட்டியில் ரப்பரை மட்டும் வீட்டில் மறந்துவிட, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் நாயகன், தனது பாக்கெட்டிலிருந்து ஆணுறையை எடுத்து அதை பால்புட்டியில் மாட்டி குழந்தைக்கு பால் கொடுக்கிறான். பின்பு ஆட்டு மந்தைக்கு சென்று அக்குழந்தைக்காக பால் கறக்க முயற்சி செய்யும் நாயகனின் செயல்களைப்பார்த்து, அப்பெண்ணிற்கே தனது குழந்தையின் மீது பாசம் வருகிறது. அவள் அக்குழந்தைக்கு உணவுட்டுகிறாள், நாயகனின் காயங்களுக்கு மருந்திடவும் செய்கிறாள். பின்பு அவளுடைய தகப்பன் வீட்டுக்கு திரும்பி வந்து அவர் உதவியுடன் அந்த நாட்டைவிட்டு சென்று விடலாம் என்று தந்தையை காண இருவரும் திரும்பி வருகின்றனர். அப்பொழுது அத்தந்தையும் குடும்பமும் எதிர் தரப்பினரால் பிடித்து சொல்லப்படுவதை மறைந்திருந்து பார்க்க மட்டுமே முடிகிறது இருவராலும். நாயகனும் அப்பெண்ணும் அவர்களுடைய சொந்த முயற்சியாலேயே அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது நடக்கும் கிளைமேக்ஸ் நமது கண்களையும் மனதையும் ஈரமடையச்செய்கிறது

இரண்டாவது படம்  L Train Lady
            நாயகனும், நாயகியும் L Trainல் எதிர்பாராத விதமாக சந்தித்து, பேச்சுக் கொடுக்க இருவருக்கும் ஒத்த அலைவரிசை இருப்பதை கண்டு கொள்கின்றனர். ஷேக்ஸ்பியரின் கவிதையை இருவரும் ஒரே நேரத்தில் சந்தோஷமாக சொல்லுவதும், பல்வேறு கவிதைகளையும் பாடல்களை பாடுவதுமாக அவர்களது பயணம் சந்தோஷமாக செல்கிறது, பயணத்தின் இறுதியில் இருவரும், பெயரும் முகவரியும் தெரிந்து கொள்ளாமலேயே பிரிந்து சென்று விடுகின்றனர். அதன்பின்பு இருவரும் ஒருவரையொருவர் தேட முயற்சிப்பதுதான் மீதிக்கதை.   நாயகன் நாயகியைத்தேடி ஒரு பிட் நோட்டிஸ்சில் எழுதி அதை தெருவெங்கும் ஒட்டிக்கொண்டே செல்ல அதை வேறொருவர் செய்திதாளில் வெளியிட ஊரே இக்காதல் கதையில் ஆர்வம் கொள்கிறது. பல்வேறு பெண்கள் தொடர்பு கொண்டு நான்தான் நீ தேடும் பெண் என்று சொல்ல நாயகனின் நண்பர்கள் அவர்களுடன் டேட்டிங் செல்கிறார்கள்.
            ஏதேச்சையாக இவ்விளம்பரத்தைக் காணும் நாயகி, நாயகன் கொடுத்திருந்த நம்பரில் அழைத்துப் பேச, அதை நாயகனின் நண்பன் வழக்கமான பெண்கள் என நினைத்து, சந்திக்க நேரமும், இடமும் குறிக்கிறார்கள். அச்சந்திப்பின் போது நாயகி கோபத்துடன் நாயகனை பெண்பித்தன் என்றும், ஏமாற்றுகாரன் என்றும் சொல்லிவிட்டு போக, அதை நண்பன் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
            மறுநாள் நாயகன் நாயகியை எதேச்சையாக ரயில் நிலையத்தில் பார்த்துவிட அவளை நோக்கி ஓடி வருகிறான், ஆனால் நாயகியோ ஒன்றும் நடவாதவளைப் போல ரயிலில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். கண்ணாடியின் வழியே என்னைத்தெரிகிறதா என்று கேட்க, அவள் அன்றைய செய்திதாள்ளை காட்டுகிறாள். அதில் நாயகன் தவறான செய்தியை சொல்லி ஏமாற்றுவதாக அவள் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதம் பிரசுரமாயிருக்கிறது. பின்பு நண்பன் தவறுக்கு மன்னிப்பு கேட்க, நாயகன் ஊரெங்கும் விளம்பர பேனர் வைக்கிறான் I AM SORRY L TRAIN LADY ன்னும் அவளை குறிப்பிட நேரத்தில் அந்த ரயில் நிலையத்தில் சந்திப்பதாகவும் விளம்பரம் பண்ணுகிறான். அந்த ரயில் நிலையத்தில் அவனோடு கூட தொலைக் காட்சி சேனல்களும் குழும அவர்கள் சேர்ந்தார்களா என்பதுதான் மீதிக் கதை. எனக்கு மிகவும் பிடித்த ரொமான்டிக் படம் இதுதான்.

மூன்றாவது படம்
            இந்த படத்தை எல்லோருமே பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு நாய் 4 சிறுத்தைக் குட்டிகளை காப்பாற்றி வேறு ஒரு சிறுத்தையிடம் ஒப்படைப்பது தான் கதை. ஒரு வேட்டைக்காரனும் அவனது நாயும் வேட்டையாட வனத்திற்கு செல்கின்றனர். 4 குட்டிகளை அப்பொழுதுதான் ஈன்ற ஒரு சிறுத்தையை வேட்டைக்காரன் கொன்றுவிட, நாய் அச்சிறுத்தைக் குட்டிகளை காப்பாற்ற வேட்டைக்காரனை விட்டு பிரிகிறது. ஒரு சமயத்தில் வேறு ஒரு தாய் சிறுத்தையை நாய் பார்த்து இக்குட்டிகளை அதனுடன் சேர்க்க குட்டிகளை அழைத்து செல்கிறது. நடுவில் ஒரு கருத்த குட்டியை பருந்து தூக்கி சென்று விட மீதம் 3 குட்டிகளையும் அந்த மற்றொரு சிறுத்தை ஏற்றுக் கொள்கிறதுடன் படம் முடிவடையும்…..

இந்த 3 படத்தினுடைய பெயர்களை பின்னுட்டதில் தெரிவித்தால் குச்சு முட்டாயும் குருவி ரொட்டியும் தரப்படும் :-))

2 comments :

தமிழ் பையன் சொன்னது…

Born free for the third

பெம்மு குட்டி சொன்னது…

///தமிழ் பையன் கூறியது...

Born free for the third ///

கூகுள்ல தேடிப்பார்த்தேன், இப்படி ஒரு படமே இல்லைன்னு வருது ;-((

Can you specific the name?