எந்த ஊரிலாவது பிச்சையெடுப்பவர்களோ, கைவிடப்பட்டவர்களோ நிரந்தரமாக தங்கி பார்த்திருக்கிறிர்களா? அவர்கள் வருமானத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு ஊருக்கும் மாறிக்கொண்டே இருப்பார்கள். அப்படி வந்த ஒரு கூட்டத்துடன்தான் நாச்சியப்பனும் எங்கள் ஊருக்கு வந்தான். ஆரடிஉயரம், கூர்மையான பார்வை, சுத்தமான நெல்லை பாஷை பேசுபவனாக இருந்தாலும் மெலுந்த தேகத்துடனும், உடலில் குறையில்லாவிட்டாலும் சற்று விந்திவிந்தி நடக்கூடியவனாகயிருந்தான். அவனுடன் வந்த கூட்டம் சிறிது நாளைக்குபின் ஊரைவிட்டு சென்றுவிட இவன் மட்டும் எங்கள் ஊரிலேயே தங்கிவிட்டான். எங்கள் ஊருக்கு வந்த நாள்முதல் யாரிடமும் கையேந்தாமல், கிடைக்கும் வேலையை செய்துகொண்டு எந்த வம்புக்கும் போகாமல், கூலிபாக்கி வைத்தாலும் எதிர்த்து பேசாமல் இருந்த காரணத்தால், ஊரில் இருந்தவர்களும் அவனை கண்டுகொள்ளவும் இல்லை, அவனை ஊரை விட்டு போகசொல்லவும் இல்லை.
தான்னுன்டு தன்வேலையுண்டு என்று இருந்தவனை ஊர்முழுவதும் பிரபலமடையவைத்தவர், சுப்பிரமணியம் வாத்தியார். பம்பாயில் நடந்த கலவரத்தைப்பற்றி ஆங்கில செய்திதாளில் வந்த செய்திகளை ஊராருக்கு சொல்லிகொண்டிருந்தவர், தனது மேதாவிதனத்தை காட்ட நாச்சியப்பனிடம் செய்திதாளைகொடுத்து எழுத்துக்கூட்டியாவது ஏதாவதொரு வாக்கியத்தை படிக்கச்சொன்னார். நாச்சியப்பன் வாத்தியாரைவிட அழகாக அனைத்து செய்திகளை வாசித்ததுடன் இல்லாமல் அவர் தவறாக மொழிபெயர்த்திருந்ததை சுட்டிக்காட்டினான். செய்திதாளிலுள்ள அனைத்து செய்திகளையும் பம்பாயின் லோக்கல் ஏரியாவின் அமைப்புகளின் விளக்கத்துடன், நாச்சியப்பன் மொழிபெயர்த்ததைக் கண்டு சுப்பிரமணியம் வாத்தியாரின் முகம் வெளிறிபோயிற்று. அதன் பின்பு, தான் பட்டபடிப்புவரை படித்திருப்பதாகவும், ஆங்கிலமும், ஹிந்தியும் நன்றாக தெரியும் என்ற சுயவிளக்கமும் அவனைப்பற்றிய மதிப்பை ஊராரிடம் மேலும் உயர்த்தின. தன்னுடைய உடல்நலம் ஒரு அலுவலகத்தில் அமர்ந்து பணிசெய்ய ஒத்துவராத காரணத்தினால் தான், கூலிவேலை செய்வதாக சொன்னதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்டவும் இல்லை.
நாச்சியப்பனுக்கு இருந்த ஒரு வினோத பழக்கம், அவன் ஒரு பெருந்தீனிகாரனாயிருந்தான், இந்த வார்த்தையில் சற்றும் பொய்யில்லை, மிகையில்லை. நாச்சியப்பனை ஒவ்வொரு முறையும் வேலைக்கு எடுக்கும்போதும், அவன் கேட்பது சாப்பாடு மட்டுமே, கூலியில் முன்னே பின்னே இருந்தாலும் ஒத்துக்கொள்வான் ஆனால் சாப்பாடு இல்லையெனில் அவன் முழுமனதாய் வேலை செய்வான் என்று சொல்ல முடியாது. அதுவும் சாப்பாடு என்றால் சாதாரணமாகவும் இல்லை, ஐந்து நபர்கள் சாப்பிடக்கூடியதை ஒற்றையாளாய் சாப்பிடுவான். அதேபோல்தான் வேலை செய்வதும், ஐந்து நபர்கள் செய்யவேண்டிய வேலையை நாச்சியப்பன் ஒற்றையாளாய் செய்து முடித்துவிடுவான். ஊரில் ஏதாவது கல்யாணம் நடக்கும் காலத்தில் அவனது சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். கல்யாணவீட்டுக்காரர் அழையாதபோதும் அவனாகவே சென்று வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான், யாரும் தடுப்பதுமில்லை. ஆனால் நாச்சியப்பன் எந்த வேலையையும் ஏனோதானோவென்று செய்ததாக யாரும் இதுவரை குறைகூறியதுமில்லை.
நாச்சியப்பனை பற்றி ஊரார் பயங்கொள்ளவும், அவனைவிட்டு சற்று விலகியிருக்கவும் வைத்தது அவனுக்கு இருந்த உலகஅறிவு. இந்திய வரலாற்றை, ஒரு வரலாற்று ஆசிரியர் (சுப்பிரமணியம் வாத்தியார்) சொல்வதைவிட அவனால் சுவாரசியமாகவும், கோர்வையாகவும் சொல்ல இயலும். மோட்டார் வாகனங்களைப்பற்றி அவனுக்கு இருந்த அறிவு, உள்ளுரில் மெக்கானிகல் கடை வைத்திருந்த குமரனைவிட அதிகமாக இருந்தது. கிலுகிலுப்பைக்கு பதிலாக நான் விளையாட்டு பொருளாக வைத்திருந்த அபாகஸ் மூலம் அவனால் கணக்குபோட முடியும். இப்படி சகலவிதத்திலும் தனித்தன்மையானவனாக இருந்த நாச்சியப்பனின் மதிப்பு, அவன் எங்கள் ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப்பின், ஒரேநாளில் பாதாளத்தைவிட கீழிறங்கியது. அதுவும் அவனுக்குமிக பிடித்த கல்யாண சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நிகழ்ந்தது தான் உச்சகட்ட சோகம்.
எங்கள் ஊரில் மட்டும் பிரபலமாக இருந்த நாச்சியப்பனை படத்துடன் செய்திதாளில் வருமளவு பிரபலப்படுத்தியவர், மாவட்ட காவல்துறை ஆய்வாளர். தனது படைபரிவாரங்களுடன் எங்கள் ஊருக்கு வந்தவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு நாச்சியப்பனின் புகைப்படத்தினை காட்டி அவனை அழைத்துவரும்படி கூறினார். கல்யாணவீட்டில் பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்தவனை குண்டுகட்டாக தூக்கி வந்தனர். நாச்சியப்பன் ஒரு முன்னாள் கடத்தல்காரனென்றும், போதை பொருட்களை கடத்தி விற்பவனென்றும், அதனால் சுமார் ஏழு வருடங்கள் சிறையில் இருந்தவன் என்றும், போதை பொருட்களை அதிகமாக உட்கொண்டதாலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு விந்திவிந்தி நடப்பதாகவும், பெருந்தீனிகாரனாய் இருப்பதாகவும் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஊர்மக்களுக்கு அறிவித்தார். சுப்பிரமணியம் வாத்தியார் உள்பட பலர் அவசர வேலையிருக்கிறது என்று அந்த இடத்தைவிட்டு நழுவினர். இதுவரை யாருடனும் சச்சரவு செய்யாமலிருந்த நாச்சியப்பன் அன்று மாவட்ட காவல்துறை ஆய்வாளருடன் செய்த வாக்குவாதத்தை கண்ட மற்றவர்களுக்கும், அவர்களுக்கு அப்பொழுதுதான் ஞாபகத்துக்கு வந்த சொந்த வேலையின்நிமித்தம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
நாச்சியப்பன், தான் விடுதலையான பின்பு திருந்தி வாழ்வதாகவும், தற்போது எந்தவிதத்திலும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடவில்லையென்றும், தான் இந்த கிராமத்தில் வாழ்வது மனித உரிமை கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு தெரியும் என்றும், அவர்மூலம் காவல்துறைக்கு தெரிவித்திருப்பதாகவும் கூறினான். தன்னை கைது செய்வதற்கோ அல்லது விசாரணைக்கு அழைத்து செல்வதற்க்கு முன்பு, மனித உரிமை கழகத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்மென்றும், இல்லையெனில் மாவட்ட காவல்துறை ஆய்வாளரின் மீது தான் வழக்கு தொடுக்க வேண்டியது இருக்குமென, கிட்டதட்ட மாவட்ட காவல்துறை ஆய்வாளரை மிரட்டினான். இறுதியில் நாச்சியப்பன் எங்கள் ஊரைவிட்டு சென்றால் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன், நாச்சியப்பனை கைது செய்யாமல் விட்டுவிட்டு மாவட்ட காவல்துறை ஆய்வாளர் தனது படைபரிவாரங்களுடன் புறப்பட்டு சென்றார்.
இதற்கு பின்பு ஊர்மக்கள் நாச்சியப்பனை அதிகமாக வேலைக்கு அழைப்பதில்லை. அவனும் அதிகமாய் அதனை கண்டுகொள்வதுமில்லை. ஆனால் கல்யாண வீடுகளை தவறவிடுவதுமில்லை. முன்பு கடைசி பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் இப்பொழுது சமையலறையில் தனியாளாய் சாப்பிட்டுக்கொள்வான். அவனுடன் சரளமாக உரையாடிய ஜனங்கள், இப்பொழுது அவன் வருவதைக்கண்டாலே விலகிச்செல்ல ஆரம்பித்தனர். அவன் சொல்லும் மொழிபெயர்ப்புகளைக் கேட்பதற்க்கு இப்பொழுது யாரும் தயாராயும் இல்லை. மெக்கானிகல் கடைக்கு வரவேண்டாமென்று குமரனும் சொல்லிவிட்டார். எனது தந்தை அபாகஸ் கருவியையே உடைத்து போட்டு விட்டார். ஆனால் நாச்சியப்பன் எங்கள் ஊரைவிட்டு போகவேயில்லை, அவனை ஊரைவிட்டு போகச்சொல்லகூடிய தைரியம் யாருக்கும் வரவில்லை என்பதுதான் உண்மை.
சுமார் ஆறு மாதங்களுக்குப்பின் ஒருநாள் நாச்சியப்பனின் உயிர் மாரடைப்பின் காரணமாக இரவு தூக்கத்திலேயே பிரிந்தது. அவனது உடலை அகற்றுவதற்க்கு கூட யாரும் முன்வரவில்லை. மேலோட்டமான காவல்துறை விசாரணைக்குப்பின் உடலை புதைப்பதற்கு அனுமதித்தனர். ஊர் பொது மயானத்தில் நாச்சியப்பனை புதைக்ககூடாதென பிரச்சனைபண்ணி அதனை சாதித்தும் கொண்டார் சுப்பிரமணியம் வாத்தியார். அதனால் தாமிரபரணி நதியின் கரையொரம் நாச்சியப்பனின் உடல் புதைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஆற்றை கடக்கும் போதும் நாச்சியப்பனை புதைத்த இடத்தை காட்டி இகழ்ச்சியாய் பேசுவது அனைவரின் வழக்கமானது. இயற்கைக்கே இது பொருக்கவில்லையோ என்னவோ அந்த ஆண்டு வந்த வெள்ளத்தில், நாச்சியப்பனை புதைத்த இடம் கூட தெரியாமல் மண்மேடாகிப்போனது.